Monday, February 29, 2016

தினம் ஒரு பாசுரம் - 66

தினம் ஒரு பாசுரம் - 66


செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே

நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்

படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!


--- பெருமாள் திருமொழி (குலசேகராழ்வார்)


சேரநாட்டில், கோழிக்கோடு தலத்தில், அரச வம்சத்தில் பிறந்த குலசேகரன், பகவான் ஸ்ரீராமபிரான் பேரில் தீவிர பக்தி கொண்டவர். ராமாயண கதாகாலட்சேபம் நடந்த சமயங்களில் கூறப்பட்டவற்றை, ராமர் மேல் அவருக்கிருந்த அன்பினால், வெகு காலத்திற்கு முன் நடந்தேறிய ராம வரலாற்றை அன்று தான் நடப்பதாக எண்ணிக் கொள்ளும் வழக்கம் உடையவர் இந்த ஆழ்வார்! இதனால், அவரிடம் ராமகதையை விவரிப்பவர்கள், ராமருக்கு துன்பம் நேர்ந்த பாகங்களை சுருக்கியும், ராமரின் கீர்த்தியையும், வீரத்தையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் பாகங்களை விரிவாகவும் உரைத்து வந்தனர்! பெருமாளுடைய (ஸ்ரீராமர்) இன்ப துன்பங்களை தனது சுகதுக்கங்களாக கருதியதால் குலசேகரருக்கு 'பெருமாள்' என்ற திருநாமமும் உண்டு.

பெருமாள் திருமொழியில், ராமனை குழந்தையாக பாவித்து தாலாட்டு பாடுவது போல் அமைந்த மிக அழகிய பாசுரங்கள், ராமன் மேல் அவருக்கிருந்த பேரன்பில் விளைந்தவை!

பாசுரப்பொருள்:

செடியாய வல்வினைகள் - (மானிடப்பிறவியில்) பெருகும் தன்மை கொண்ட கொடிய பாவங்களை
தீர்க்கும் திருமாலே - ஒழிக்க வல்ல (பரம்பொருளான) திருமாலே
நெடியானே வேங்கடவா -  உயர்ந்து நிற்கும் திருவேங்கடத்து அண்ணலே
நின் கோயிலின் வாசல் - உனது (திருமலைக்) கோயில் சன்னதியின் வாசலில்
அடியாரும் வானவரும் - (உனது) அடியார்களும் இமையவரும்
அரம்பையரும் - தேவ மகளிரும்
கிடந்தியங்கும் - ஏறிக் கடந்து செல்லும்
படியாய்க் கிடந்து - (ஒரு) படியாகக் கிடந்து
உன் பவளவாய் காண்பேனே! - உனது பவளச் செவ்வாய் அழகை (எப்போது) கண்டு மகிழ்வேனே !

பாசுரக்குறிப்புகள்:

திருப்பதி மலையில் வீற்றிருக்கும் திருமால், வராக அவதாரம் எடுத்து இரண்யாட்சனைக் கொன்று பூதேவியை தன் கொம்புகளால் மீட்டுக் கொண்டு வந்ததாகப் புராணம் கூறுகிறது.

செடியாய வல்வினைகள் - "செடி" என்பதற்கு பல பொருள்கள் உண்டு. அவை "புதர்; நெருக்கம்; பாவம்; தீமை; துன்பம்; தீநாற்றம்; அற்பம்; ஒளி; குற்றம்".
"செடி" என்பதை புல்/புதர் என்று எடுத்துக் கொண்டால், மானிடப்பிறவியில் வளர்ந்து கொண்டே இருக்கும் இயல்புடைய பாவங்களை ஆழ்வார் குறிப்பிடுகிறார் என்று தெளியலாம். "செடியார்  வினைகள் தீர் மருந்தே திருவேங்கடத்து எம்பெருமானே" என்று நம்மாழ்வாரும் திருவாய்மொழிப் பாசுரம் ஒன்றில் அருளியிருக்கிறார்.  தீமை/துன்பம் என்று பொருள் கொண்டாலும் பொருத்தமே. "நமக்குக் கேடு விளைவிக்கும் கொடும்பாவங்கள்" என்றாகிறது.   ஆக,  நமது கொடிய பாவங்களைக் களைய வல்லவன், இக்கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான திருமலை வாழ் எம்பிரான் ஒருவனே என்பது பாசுரம் தரும் செய்தி.

நெடியானே - வாமன வடிவத்தில் வந்து பின் வானுக்கும் மண்ணுக்குமாய் நெடிதுயர்ந்து நின்ற  திரிவிக்கிரமனை  ஆழ்வார் போற்றுவதாகக் கொள்வது தகும்.

அடியாரும் வானவரும் அரம்பையரும் - மண்ணவர், விண்ணவர் என்று சகலரும் அடி பணியும் திருத்தலம், கோவிந்தன் எனும் ஸ்ரீநிவாசன் அருள் பாலிக்கும் திருமலையே! திருவேங்கடமுடையானின் அடியவரை, தேவ கணங்களுக்கு நிகராகச் சொல்வதாகக் கொள்வதிலும் ஒரு நயம் உள்ளது தானே!

கிடந்து இயங்கும் - முந்தைய 2 பாசுர இடுகைகளில் விளக்கிய  "சென்று சேர்", "அமர்ந்து புகுந்து"  போல, இதற்கும் நயம் சார் விளக்கம் தரலாம். "கிடந்து" என்பது சரணாகதித்துவத்தைச் சொல்கிறது. அடிப்பற்றலுக்குப் பின்னரே "இயக்கம்" வருகிறது.  எத்தைகைய இயக்கம்?  

மருள் இல் இயக்கம் --- அறியாமை இருள் தரும் மயக்கம் நீங்கிய, பேரின்பத்தை நோக்கிய ஆன்ம இயக்கம்! இங்கு அறியாமை என்பது, புலன்சார் இன்பங்களுக்கு அடிமையாய் இருத்தல், பரமனே கதி என்ற புரிதல் இன்றி இருத்தல், அகந்தை, பொறாமை, பிறர்க்குத் தீது நினைத்தல்/செய்தல்  என பலவகைப்படும்.

இதை "புலன் சார்"  நல் இயக்கமாகவும் பார்க்கலாம். எங்ஙனம்? வாயானது பரமனைப்  போற்றுகிறது, கண்ணானது அவன் திருவழகைப் பார்க்கிறது (உன் பவளவாய் காண்பேனே!), செவியானது சக அடியவரின் ஹரி நாம சங்கீர்த்தனத்தைக் கேட்கிறது.

படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே - இப்பாசுர வரியே, திருமலைக் கோயிலின் (பிற விஷ்ணு ஆலயங்களிலும் கூட) உள்வாயிற்படி, "குலசேகரன் படி" என்று அழைக்கப்படுவதற்குக் காரணம்.

--- எ.அ. பாலா

4 மறுமொழிகள்:

maithriim said...

அதனால் தான் நாம் பெருமாளை கர்ப்பகிரகத்தில் தரிசிக்கச் செல்லும்போது படியை மிதிக்காமல் தாண்டிச் செல்லும் பழக்கத்தைக் கடைபிடிக்கிறோம். இந்தப் பாசுரம் குலசேகர பெருமாளின் அடியார்க்கு அடியவராய் இருக்கப் பிரியப்படும் வைணவர்களின் தன்மையை எடுத்துக்காட்டுகிறது. மனத்துக்கு மிகவும் நெருக்கமான பாசுரம் இது.

amas32

Anuprem said...

அருமையான விளக்கம் ...குலசேகரன் படி பற்றி அறிந்து கொண்டேன் ஐயா... பகிர்வுக்கு மிகவும் நன்றி ஐயா ...

Tamil said...

Great post.

Arumugham said...

Great post.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails